புதுடில்லி: ‘அதானி’ விவகாரத்தில், பங்குச்சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அமைக்கப்படும் குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை மத்திய அரசு சீல் வைத்த கவரில் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை ஏற்று கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கள் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி விழுமத்தின் பங்குச்சந்தைகள் விலை கடும் சரிவை சந்தித்ததால் அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, ஏற்கனவே இரண்டு பொது நலன் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ‘பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதமாக, பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம்’ என, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியிருந்தது.
இதன் பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான ‘சொலிசிட்டர்’ ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம் என்ற நீதிமன்றத்தின் யோசனையை ஏற்கிறோம்.
இதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அதேநேரத்தில், அந்த குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். குழு உறுப்பினர்களின் பெயர்களை, ‘சீலிடப்பட்ட’ உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்கிறோம் எனக்கூறியிருந்தார். இதன்படி மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி சந்திரசூட், சீல் வைத்த கவரில் மத்திய அரசு அளித்த பரிந்துரையை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம். விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும். நிபுணர் குழுவை நாங்கள் அமைப்போம் எனக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement