அரசு பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணி புரிவதாகவும், அதனால் அரசு பள்ளிகளில் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.
அதன்படி நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலின்றி பணிக்கு வராதவர்கள், அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள் போன்ற மேற்காணல் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இமெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.