புதுடெல்லி: ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ், இந்திய ஜனநாயகத்தை அழிக்க முயல்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் அதானி குழுமம், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் குற்றம்சாட்டியது. இதை அடுத்து, அதானி குழுமத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதானியின் வணிக சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை உலுக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜார்ஜ் சோரஸ், இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் ஜார்ஜ் சோரஸ் குற்றம் சாட்டவில்லை என்றும், இந்திய ஜனநாயக அமைப்பையும் அவர் குறைகூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஜனநாயக முறையை அழிக்கும் நோக்கில் அவர் 100 பில்லியன் டாலர் நிதியை உருவாக்கி இருப்பதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஜனநாயகத்தை அழித்துவிட்டு, ஆட்சியில் தங்களுக்கு சாதகமான நபர்களை அமர வைக்கும் நோக்கில் ஜார்ஜ் சோரஸ் செயல்படுவதாகவும், இதற்கு கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றைக் குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.