சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்ற உத்தரவாதத்தை, தேர்தல் ஆணையம் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில், அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் 2-க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன.
தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். இதில், இறந்தவர்கள் 7,947 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியிலேயே இல்லை. இதைப் பயன்படுத்தி, காங்கிரஸுக்கு சாதகமாக கள்ள ஓட்டுப்போட ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக உள்ள அமைச்சர் ஒருவர், பணப்பட்டுவாடா குறித்து நிர்வாகிகளிடம் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர்கள் என்பதால், மத்திய ரிசர்வ் படைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், பூத் சிலிப்பை அடிப்படையாகக் கொள்ளாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து, வாக்களிக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், இரட்டைப் பதிவு உள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாகத் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுக்காப்புப் பணியில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 409 போலீஸார் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். இதுதவிர, பறக்கும் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் கண்காணிப்புக் கேமரா மூலமாக பதிவு செய்யப்படும். புகைப்பட வாக்காளர் பட்டியல் அடிப்படையில், தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கள்ள ஓட்டுப்போடுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த, முடிந்த அளவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் சி.வி.சண்முகம் தரப்பில், தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
அதை ஏற்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.