டெல்லி : கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கியை தாக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 4 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல பிப்ரவரி 15ம் தேதி நியூசிலாந்தில் 6.1 அளவிலும் கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிப்ரவரி 16ம் தேதி பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலும் அமெரிக்காவின் ஓசன்வியூவில் 4.8 ரிக்டர் அளவிலும் ஆப்ரிக்க நாடான காங்கோவில் 5.3 ரிக்டர்அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயாவில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன. அசாமில் 4.0 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிக்கிமில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. மேகாலயாவில் 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.