கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீனாவில் இருந்து வந்துள்ள அதிசய நிறம் மாறும் ரோஜா பூக்கள் விரைவில் சுற்றுலாப்பயணிகளை பார்வைக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், சீனாவை பூர்வீகமாகக் கொண்ட மால்வேசிய குடும்ப வகையைச் சேர்ந்த நிறம் மாறும் ரோஜாக்கள் பூத்துள்ளன.
ஹைபிஸ்கஸ் மட்டாப்ளீஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடி இரண்டு வண்ணங்களில் பூத்துள்ளது. இந்த பூக்கள் காலையில் வெண்மை நிறத்திலும், நண்பகலில் வெண்மை மற்றும் இளஞ்சிவப்பிலும், மாலையில் முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. அதிசயிக்கத்தக்க வகையில் ஒரே செடியில் பூத்து ஒரே நாளில் நிறம் மாறும் ரோஜா செடிகள், பிரையண்ட் பூங்கா அலுவலக பின்பகுதியில் நடப்பட்டு தற்போது பூத்துள்ளது.
மலைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த ரோஜாக்களை பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்குரிய நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்து வருவதாக, அதன் மேலாளர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.