பெங்களூரு: விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் இன்னும் 100 நாட்களுக்குள் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரும் நிதி அமைச்சருமான பசவராஜ் பொம்மை, கடைசி பட்ஜெட்டை அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். குரலற்றவர்களுக்கான பட்ஜெட்டாக தனது இந்த பட்ஜெட் இருக்கும் என்றும், விவசாயிகள், வேலைக்குச் செல்பவர்கள், ஏழைகள், பெண்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்த பசவராஜ் பொம்மை, இந்த ஆண்டு உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவரது பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
விவசாயம்: விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா ஆண்டு கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 50 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் பூ ஸ்ரீ எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்திற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்படும். விவசாய நிலம் இல்லாத பெண் தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 500 வழங்கப்படும்.
கல்வி: அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், ஆஷா பணியாளர்கள், நூலகர்கள் ஆகியோருக்கான மதிப்பூதியத்தில் ரூ. ஆயிரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி. மாணவர்களுக்கென்று தனியாக பேருந்துகளை இயக்க ரூ.100 கோடி. ஒரு லட்சம் பெண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும். அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி.பள்ளி மற்றும் கல்லூரிகளில் 5,581 கழிவறைகளை கட்ட ரூ. 86 கோடி ஒதுக்கப்படும். ரூ. 382 கோடி மதிப்பில் 1,995 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். தேசிய கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIS, NIT ஆகியவற்றில் கல்வி பயிலும் வாய்ப்பு பெறும் பழங்குடி மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
சுகாதாரம்: பெங்களூருவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்காக 250 கழிப்பிடங்கள் ரூ. 50 கோடி நிதியில் கட்டப்படும். 6 இஎஸ்ஐ மருத்துவமனைகள், 28 சுகாதார மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான 10 மருத்துவமனைகள் ஆகியவை அமைக்கப்படும். பெங்களூருவை மேம்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
கோயில்கள்: கோயில்கள் மற்றும் மடங்களை இந்து சமய அறநிலையத்துறை மூலம் சீரமைக்க ரூ. 425 கோடி நிதி ஒதுக்கப்படும். ராம்நகரா மாவட்டத்தில் ராமதேவரபெட்டா என்ற இடத்தில் கம்பீரமான ராமர் கோயில் கட்டப்படும். உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.