கர்நாடக தேர்தல் 2023: இஸ்லாமிய வாக்கு வங்கி… லிங்காயத்து குமுறல்; பாஜகவிற்கு வேற வழியில்லை!

வரும் ஏப்ரல் – மே மாதங்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமர முடியும். கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

தேர்தல் என்றாலே சமூக ரீதியிலான அணுகுமுறையை தவிர்க்க இயலாது. இவற்றை குறிவைத்தே அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து சமூகம் முக்கியமானதாக பங்காற்றுகிறது. இதையொட்டியே எடியூரப்பா முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

பாஜக வியூகம்

ஆனால் அவர் ஓரங்கட்டப்பட்டதால் அந்த சமூக மக்கள் பாஜக மீது பெரிதும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மற்ற சமூக வாக்குகள், சிறுபான்மையின வாக்குகளை குறிவைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களின் வாக்குகளுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது. ஆனால் பாஜக என்றாலே இந்துத்துவா அடையாளம் தான் முதலில் நினைவில் தோன்றும்.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பு

இருப்பினும் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறது. ஆனால் மத்தியிலும், வட இந்தியாவிலும் நடைபெறும் சில நிகழ்வுகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான பார்வையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பாஜக உடன் இணக்கமான நிலையில் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

சமூக வாக்குகளுக்கு குறி

இதனை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் மாற்ற வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. இதையொட்டி அவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இஸ்லாமியர்கள் பல்வேறு பிரிவினராக பிரிந்து கிடக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு பிரிவினரையும் வசப்படுத்தும் வகையில் பாஜக தலைவர்களுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மத நல்லிணக்க விருந்து

கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமியர்களை அழைத்து மத நல்லிணக்க விருந்திற்கு பாஜக ஏற்பாடு செய்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த சமூக மக்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட் சட்டமன்ற தொகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றை பாஜக தலைவர்களே முன்னின்று நடத்தினர்.

ஒக்கலிகா சமூக வாக்குகள்

அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு முன்பை விட அதிகமாக சீட் கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு பெரிதும் கைகொடுத்து வரும் ஒக்கலிகா சமூக வாக்குகளை கவரும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குமாரசாமி குடும்ப அரசியல்

இதற்காக குமாரசாமியின் குடும்ப அரசியலை ஒரு வியூகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த சமூக வாக்குகள் பாஜகவிற்கு பெரிதும் கைகொடுக்கப் போகின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.