தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 2020ல் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது. இதன்மூலம் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்தவித திட்டங்களும் முன்னெடுக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டது.
திமுக எம்.பி கேள்வி
இதற்காக கிணறுகள் அமைக்கும் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மீண்டும் தொடங்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்படி எதுவும் இல்லை என ஆளுங்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.கிரிராஜன் சில கேள்விகளை எழுப்பினார்.
சிறப்பு வேளாண் மண்டலம்
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் சிறப்பு விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் உற்பத்தி திட்டத்திற்காக நிறுவப்பட்ட பெட்ரோலியம், ஹைட்ரோ கார்பன் மற்றும் இதர சாதனங்களை அகற்றப்படும் நாள் எது? இதுகுறித்த விவரங்கள் பற்றி எந்த ஒரு தேதியும் குறிப்பிடப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மத்திய அரசு பதில்
அதற்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல மேம்பாட்டு சட்டம் 2020ன் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களையோ அல்லது புதிய நடவடிக்கைகளையோ மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்
தற்போது நடைபெற்று வரும் பெட்ரோலியம் தொடர்பான நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் மேற்குறிப்பிட்டுள்ள கட்டமைப்புகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சென்னை போன்ற நகரங்களில் வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டுவது போன்ற ஏதாவது திட்டங்களை அரசு வகுத்திருக்கிறதா?
நிதி ஒதுக்கீடு
அதுபற்றிய விவரங்களை கிரிராஜன் கேட்டிருந்தார். அதற்கு, PMKSY ஹர் ஹாத் கோ பானி (நீர்நிலைகளை பழுது பார்த்தால், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு) திட்டத்தின் கீழ் பழுது பார்த்தல், சீரமைப்பு, புதுப்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள எட்டு நீர்நிலைத் தொகுப்புகளுக்கான நிதியுதவி சேவைகள் இந்த அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் உதவியாக அனுமதிக்கப்பட்ட மொத்தத் தொகை 186.53 கோடி ரூபாய். அதில் 2017-18 – இல்லை, 2018-19 – ரூ.7.03 கோடி, 2019-2020 – ரூ.16.75 கோடி, 2020-21 – ரூ.1.25 கோடி, 2021-22 – ரூ.17.43 கோடி, 2022-23 (இன்று வரை) – ரூ.19.3 கோடி என்று மத்திய இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி பதில் அளித்துள்ளார்.