கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கொலையான ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன்கள் பிரபாகரன் (31). பிரபு (28). இருவரும் ராணுவ வீரர்கள்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி பொதுகுடிநீர் தொட்டி அருகே துணி துவைத்தது தொடர்பாக மாதையன் குடும்பத்தினருக்கும், நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. அன்று மாலை 6 மணிக்கு சின்ன
சாமி மற்றும் அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி(27), குணாநிதி(19), ராஜபாண்டியன்(30) மற்றும் சிலருடன் சென்று, பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை, தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டுக் கட்டை, இரும்புக்கம்பியால் தாக்கினர்.
இதில் பிரபுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பிலும் தரப்பட்ட புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீஸார் இருதரப்புகள் மீதும் வழக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில், காயம் அடைந்த பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸார், திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன்களான சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் குருசூர்யமூர்த்தி, தனியார் கல்லூரி மாணவர் குணாநிதி, தனியார் பள்ளி ஆசிரியர் புலிபாண்டி(24) மற்றும் உறவினர்களான கார் ஓட்டுநர் ராஜபாண்டி, மணிகண்டன் (32), மாதையன் (60), வேடியப்பன் (55), காளியப்பன் (40) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். உயிரிழந்த பிரபுவின் உடல் வேலம்பட்டியில் நேற்று முன் தினம் இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராணுவ வீரர் பிரபு, ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்தார். பதவி உயர்வுக்காகப் பெங்களூருவில் பயிற்சி பெற்று வந்தவர். ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் அவர் கொலையானார். பிரபுக்குப் புனிதா என்ற மனைவியும், நாகஸ்ரீ (4) என்ற மகளும், ஜானுஸ்ரீ என்ற 4 மாதக் குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே, பாஜகவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் நேற்று வேலம்பட்டியில் உள்ள பிரபுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இக்கொலையைக் கண்டித்து, வேலம்பட்டியில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன், ராணுவ வீரர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்றார்.
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் கூறும்போது, “பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். பிரபுவின் மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். ராணுவ வீரருக்குச் சொந்த ஊரில் பாதுகாப்பு இல்லாததது வேதனையளிக்கிறது” என்றனர்.