கிளிநொச்சி மாவட்டத்தில், நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்வனவு

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை அண்மையில் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022/2023 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்குவதும், மேலதிக நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்வதும், தற்போதைய கடினமான பொருளாதார நிலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

குறித்த திட்டத்திற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில்  (15) இடம்பெற்றது.

இத் திட்டத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாட்டரிசி வகை நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படவுள்ளது.

நெல் கொள்வனவு நடவடிக்கையின் போது நெல்லை கையேற்பது,களஞ்சியப்படுத்துவது அதனுடன் தொடர்புள்ள ஆவணங்களைப் பேணுவது, கணக்குகளை வைத்திருத்தல் ஆகிய பொறுப்புகள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசியாக மாற்றப்பட்டு 2023 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை உள்வாங்கி, ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ வீதம் இரண்டு மாத காலத்திற்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 7,149 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது.

தொடர்ந்து குறித்த திட்டத்தினை கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Logini Sakayaraja

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.