கும்பகோணம்: சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகளின் வாகனம் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும், மேலும், அம்பிகா, தரணி சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 400 கோடி வட்டியுடனும், ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரமும், மூடியுள்ள சர்க்கரை ஆலைகளை திறக்கவும், நலிவுற்ற சர்க்கரை ஆலை புணரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (17-ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போராட்டத்தில் கலந்து கொள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3 பேருந்துகளில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சென்னை வந்தனர் .2 பேருந்துகள் சென்ற நிலையில் மீதமுள்ள ஒரு பேருந்தை புளியஞ்சேரி புறவழிச்சாலையில் செல்லும் போது, காவல் துணை கண்காணிப்பாளர்கள் பி.மகேஷ்குமார் மற்றும் போலீஸார் மறித்தனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, சாதாரணமான சோதனை என நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்ட விவசாயி ஆ.சரபோஜி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனாலும் போலீஸார் பேருந்தை விட மறுத்ததால், கண்டன முழக்கமிட்டனர். இதனால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் நிலை ஏற்பட்டதால், அப்பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பின்னர், அவர்கள் அனைவரும் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர்.