கோவை: வெள்ளியங்கிரி மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதை குறைக்க, பாட்டில்களுக்கு வைப்புத் தொகை பெற்று திரும்ப அளிக்கும் திட்டத்தை இன்று முதல் வனத்துறை அமல்படுத்தவுள்ளது. கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரியின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கோயிலுக்கு சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக சுமார் 6 கி.மீ தூரம் பக்தர்கள் மேலே நடந்து செல்கின்றனர்.
இதில் பலர் தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின் பண்டங்களின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வருகின்றனர். இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்குகின்றன. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் டன் கணக்கில் தேங்கும் கழிவுகளை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, பக்தர்கள் மலையேறும்போது கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழேவந்து பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த வேண்டும் என்று அவரகள் தெரிவித்துள்ளனர்.
சூழலை காக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், நடப்பாண்டு அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இதற்காக வனப் பணியாளர்கள், உள்ளூர் சூழல் காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து மலையேறும் பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்காக பரிசோதனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலை ஏறுவதற்கு முன் பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்படும். பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதன் மூலம் இயற்கை எழில் சூழ்ந்த மலைமீது பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே தூக்கி எறிவது தவிர்க்கப்படும் உணவு தெரிவித்துள்ளனர்.