புதுடெல்லி: ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதால் 2023-ம் ஆண்டு டெல்லி காவல்துறைக்கு முக்கிய ஆண்டாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
டெல்லி காவல்துறையின் 76-வது எழுச்சி தினம் டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதால் 2023-ம் ஆண்டு டெல்லி காவல்துறைக்கு முக்கிய ஆண்டாக இருக்கும். பலநாடுகளின் தலைவர்கள் இங்குவருவார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை பொறுத்தவரை, நகர காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும்.
கரோனா பரவியபோது முதியோருக்கும் பிற பாதிக்கப்பட்ட மக்களுக்கும் டெல்லி காவல் துறையினர் சேவையாற்றினர். அவர்களின் மனிதாபிமானப் பணிகள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அக்காலகட்டத்தில் காவல்துறையை சேர்ந்த பலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்” என்றார்.