துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு மின் நிலையம் கட்டுவதற்கு மீண்டும் எதிர்ப்பு

நகோசியா: துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால், அங்கு அணுமின் நிலையம் கட்டுமான பணிக்கு உள்நாட்டிலும், அண்டை நாடான சைப்ரஸிலும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

துருக்கியின் தெற்கு கடலோர பகுதியில் அக்குயூ என்ற இடத்தில் 4,800 மெகாவாட் திறனில் அணுமின் நிலையம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இது துருக்கியின் மின்சார தேவையில் 10 சதவீதத்தை வழங்கும். இதன் கட்டுமானம் மற்றும் பாராமரிப்பு எல்லாம் ரஷ்யாவின் ரொசாடம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்படும் 4 அணு உலைகளில், முதல் அணு உலை இந்தாண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது துருக்கியில் சமீபத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதியிலிருந்து 394 கி.மீ தொலைவில் உள்ளது. பூகம்பம் குறித்த 8 ஆண்டு கால ஆய்வுக்குப்பின் இங்கு அணு மின் நிலையம் கட்டுவதற்கு 1976-ம் ஆண்டே உரிமம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 1986-ம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் அணு உலை விபத்தால், இந்த கட்டுமானம் தாமதம் ஆனது.

சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம்ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் பதிவாகியது. இதில் பல கட்டிடங்கள் தரைமட்டமானாலும், அணுமின் நிலைய கட்டுமானம் நடைபெறும் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மிகவும் சக்திவாய்ந்த பூகம்பத்தையும் தாங்கும் வகையில்தான் அணு மின் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், துருக்கியில் உள்ள சிலர் அங்கு அமைக்கப்படும் முதல் அணு மின் நிலையம் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறுகின்றனர். பூகம்பம் ஏற்படும் பகுதிக்கு அருகே அணு மின் நிலையம் அமைவது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். துருக்கியின் அண்டை நாடான சைப்ரஸில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள், அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள், அக்குயு பகுதியில் அணு மின் நிலையம் கட்டுவதை துருக்கி அரசு நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றன. சைப்ரஸ் நாட்டுக்கு அருகே பூகம்பம் ஏற்படும் பகுதியில் அணுமின் நிலையம் கட்டுவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் இந்த அணு மின் நிலைய கட்டுமானத்தை நிறுத்த உடனடி நடவடிக்கையை ஐரோப்பிய ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என சைப்ரஸ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டெமிட்ரிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், இது குறித்து அணுமின் நிலைய கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள ரொசாடம் கூறுகையில், ‘‘அணுமின் நிலையம் கட்டப்படும் அக்குயு பகுதியில் 10,000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் அதை தாங்கும் வகையில்தான் அணு உலைகள் வடிவமைக்கப்படுகிறது. இப்பகுதியில் இதற்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தை விட தீவிரமான பூகம்பத்தையும் தாங்கும் வகையில்தான் அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது.

அணு உலைகள் மிகவும் வலுவான கான்கிரீட்டுகளால் உருவாக்கப்படுவதால், அவை வர்த்தக கட்டிடங்களை விட வலிமையாக இருக்கும் என பூகம்ப பொறியியல் மற்றும் அணு உலைகள் கட்டுமான நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரு விட்டாகர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் அமைக்கப்படும் அணுமின் நிலையங்கள் எல்லாமே, பூகம்பத்தை தாங்கும் வகையில்தான் உருவாக்கப்படுகிறது. 20 சதவீத அணு உலைகள் பூகம்பம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன என உலக அணுசக்தி சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ஹமோகா அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ரிக்டர் அளவில் 8.5 புள்ளிகள் அளவுக்கு பூகம்பம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2011-ம்ஆண்டு சுனாமியால் ஃபுகுஷிமா அணு மின்நிலைய விபத்துக்குப்பின் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. துருக்கி அணுமின் நிலைய கட்டுமானத்துக்கும் பல தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அணு மின் நிலைய திட்டத்தை மறு மதிப்பீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என துருக்கி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.