தென்மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் கிழக்கு கடற்கரை ரயில் திட்டம் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: மறுமதிப்பீடு சர்வே கூட அறிவிக்கப்படாததால் அதிர்ச்சி

மதுரை: தென்மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் கிழக்கு கடற்கரை ரயில் திட்டமானது, மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மறுமதிப்பீடு சர்வே கூட அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட புதிய ரயில் இருப்புப்பாதை திட்டங்களில், மதுரை – தூத்துக்குடி தவிர மற்ற அனைத்துத்திட்டங்களும் மிகக்குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு என சர்வேக்கு தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 25 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் 8 புதிய இருப்புப்பாதை திட்டங்களும், ஒரு இருப்பு பாதை திட்டமும் சர்வே மறுமதிப்பீடு அறிவிக்கப்பட்டது. இதில் மறுமதிப்பீடு சர்வே திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது தென்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மறு மதிப்பீடு சர்வேக்கு அறிவிக்கப்பட்டிருந்தால், இத்திட்டத்தின் ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரித்தால், அடுத்து வரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த பிரகாசமான வாய்ப்பு வரும். இதற்குக்கூட பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

தென்மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால், தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, கோவை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் – மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.

திருநெல்வேலி – நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 8-4-1981ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை 15-4-1979அன்றும், விருதுநகர் – அருப்புக்கோட்டை மீட்டர்கேஜ் பாதை 1-9-1963 அன்றும், அருப்புக்கோட்டை – மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 2-5-1964ம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்த திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தென்மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்பு பாதைகள் ஆகும். அதன்பிறகு இதுவரை எந்தவொரு இருப்பு பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை.

பிரதமர் மோடி, கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளை தாண்டியும், இத்திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறைந்தபட்சம் இத்திட்டம் மறுமதிப்பீட்டுக்கு கூட அறிவிக்கப்படவில்லை. கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று தென்மாவட்ட மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும்போது இவ்வழித்தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகம் நேரடியாக ரயில் வழிப்பாதை மூலம் இணைக்கப்பட்டு விடும். இதனால் பின்தங்கிய நிலையிலுள்ள இப்பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக 136 கிமீ சுற்றுப்பாதையில்தான் பயணிக்க முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்பட்டால் பயண தூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.

கடற்கரை பகுதிகளில் தான் அதிகளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் உள்ளன. அதாவது அணுமின் நிலையம், ராக்கெட் ஏவுதளம், நாங்குநேரி கடற்படை முகாம் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். எனவே, இத்திட்டம் இந்திய ராணுவம் சார்ந்த பாதுகாப்பு சார்ந்த திட்டமாகும். இத்திட்டத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.