புதுடெல்லி: அதானி குழும பங்குசந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்படும் நிபுணர் குழு அவரை தப்ப வைப்பதற்கான முயற்சியாகும் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்னை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர்(தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், அதானி குழும பங்கு சந்தை மோசடிகள் குறித்த வழக்கை கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கையில், இது பற்றி நிபுணர்கள் அடங்கிய குழு விசாரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 17ம் தேதிக்குள் (இன்று) பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமத்துடன் ஆளும் கட்சி மற்றும் ஒன்றிய அரசு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இந்நிலையில்,ஆளும் கட்சிக்கும் அதானி குழுமத்துக்கும் இடையே உள்ள தொடர்பை மறைப்பதற்கான நோக்கத்துடன் நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்பதற்கு முயற்சிகள் நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டு குழு(ஜேபிசி) அமைத்தால் மட்டுமே ஆளும் அரசுக்கும், அதானிக்கும் இடையே உள்ள தொடர்பைவெளிக்கொண்டுவர முடியும். ஜேபிசியை தவிர்த்த வேறு ஏதாவது கமிட்டிகள் அமைக்கப்பட்டால் அது முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தப்ப வைப்பதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.