இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச செய்தி ஊடகமான பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இரவு, பகலாக நீடித்த ஆய்வு வியாழன்கிழமை இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த ஆய்வின் போது, சில ஊழியர்களிடம் நீண்ட நேரம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையிலான ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும், நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இரவில் தங்க நேர்ந்த ஊழியர்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டி இருப்பதாகவும் பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் ஒளிபரப்பு வழக்கம்போல் தொடங்கும் என்றும், எந்த அச்சமும், பாரபட்சமுமின்றி தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்கு பின் கோப்புகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஆய்வு குறித்து வருமான வரித்துறை இதுவரை அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.