பி.பி.சி., அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஆய்வு| BBC, third day of investigation at the office

புதுடில்லி, சர்வதேச ஊடக நிறுவனமான, பி.பி.சி.,யின் புதுடில்லி அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ௨௦௦௨ல் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது.

சர்ச்சை

இது, ௨௦௦௨ல் குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், கலவரத்துக்கும் தொடர்பு உள்ளதுபோல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. இது பெரும் அரசியல் சர்ச்சையானது.

இந்நிலையில், புதுடில்லி மற்றும் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள, பி.பி.சி.,யின் அலுவலகங்களில், வருமான வரித் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த ௧௪ம் தேதி காலையில் துவங்கிய இந்த ஆய்வுப் பணி, தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் நடந்தது.

சர்வதேச வரி முறைகேடு மற்றும் தன் துணை நிறுவனங்களுக்குள் நிதி மாற்றத்தில், பி.பி.சி., மோசடியில் ஈடுபட்டுள்ள புகார் தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்படுவதாக, வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக, பி.பி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆய்வு தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த ஆய்வில், நிறுவனத்தின் நிதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு துவங்கியதில் இருந்து, ௧௦க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் நிதித் துறை ஊழியர்கள் தொடர்ந்து அலுவலகத்திலேயே தங்கியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்.,கடும் எதிர்ப்பு

பி.பி.சி., நிறுவனத்தின் குஜராத் தொடர்பான ஆவணப் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் வார இதழான, ‘பாஞ்சசன்யா’வில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:மனித உரிமை என்ற பெயரில் பயங்கரவாதிகளை பாதுகாக்கும் முயற்சி நடந்தது. சுற்றுச்சூழல் என்ற பெயரில், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சி நடந்தது.தற்போது பேச்சு உரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில், நம் நாட்டுக்கு எதிரான பிரசாரத்தை நம் நாட்டில் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது.இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை தங்களுக்கான ஆயுதமாக, தேசவிரோத சக்திகள் பயன்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றமானது, நம் நாட்டு மக்களின் வரிப் பணத்தில், நம் நாட்டைப் பாதுகாப்பதற்காக, நம் நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.இந்த ஆவணப் படத்தை பி.பி.சி., நம் நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன், பொய்யான தகவல்களின் அடிப்படையில் தயாரித்துள்ளது.நம்முடைய ஜனநாயகம், நம்முடைய தாராள மனப்பான்மை, நம்முடைய நாகரிக தரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தேசவிரோத சக்திகள் முயற்சிகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.