சென்னை: மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கூறியதாவது: ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக பதவி ஒழிப்பு, மின் கட்டண வசூல் மையங்களில் பணியாளர் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அவ்வப்போது மின்வாரியத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை அறிக்கை, கடிதம்போன்ற வழிகளில் வழங்கியுள்ளோம். ஆனால் வாரியத்தின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட பதவிகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
வாரியத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். மார்ச் முதல்வாரத்தில் அலுவலகம் சென்று கையெழுத்திட்டு பணியை புறக்கணிப்பது என நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இது தொடர்பாக அடுத்த கட்ட ஆலோசனை நடத்தி தேதி அறிவிக்கப்படும் என்றனர்.