மும்பை,மும்பையைச் சேர்ந்த, ௨௫ வயது வாலிபர் கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பு சரியான நேரத்தில் தகவல் அளித்ததால், அந்த வாலிபரை மும்பை போலீசார் மீட்டனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியைச் சேர்ந்த, ௨௫ வயது இளைஞர், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
படிப்பதற்காக வாங்கிய கடன் மற்றும் வீட்டுக் கடன் தவணையை செலுத்த முடியாமல் திணறியுள்ளார். இதனால் விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார்.
வலியில்லாமல் தற்கொலை செய்வது எப்படி என, இணையதளத்தில் இவர் தகவல் தேடியுள்ளார். இதை அமெரிக்காவில் உள்ள தேசிய மத்திய வாரியம் என்ற உளவு அமைப்பு கண்டுபிடித்தது.
இது தொடர்பாக, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் புதுடில்லி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தது.
உடனடியாக மும்பை போலீசார் எச்சரிக்கப்பட்டனர். இதையடுத்து, மும்பை போலீசார் அந்த இளைஞரை மீட்டனர். அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கு முன்பும் இதுபோல் தற்கொலை முயற்சியில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறும்படி, அந்த இளைஞருக்கு போலீசார் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement