விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவ்வரசின் முக்கிய இலக்கு

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது., “ஓர் அரசு ஏன் இயங்குகிறது? அரசு அதிகாரிகளின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சட்டங்களும், திட்டங்களும் எதற்காக வகுக்கப்படுகின்றன? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரே பதில் “மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தல்” என்பது மட்டுமே.மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை, அரசு தீர்த்திடும் என்ற நம்பிக்கையில் அவற்றையெல்லாம் மனுக்களாக நம்மிடத்தில் வழங்குகிறார்கள். அவற்றை, நாம் வெறும் காகிதங்களாக பார்க்காமல் ஒருவரின் வாழ்வாக, எதிர்காலமாக கருதி பார்க்கவேண்டும்.

இருக்க வீடு; நடக்க சாலை; குடிக்க தண்ணீர்; இரவில் தெருவிளக்கு; படிக்கப் பள்ளி; கிராம சுகாதாரம் – இதைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் இருந்தாலும் அவற்றை தீர்த்து முன்னேற்றம் காணுங்கள். விவசாயிகளின் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவ்வரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வு வளமானால்தான், மாநிலம் வளரும், அது வளம் பெற்றதாகக் கருதப்படும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.

அடுத்தபடியாக, சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளில் வரக்கூடிய அரசு திட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை புறந்தள்ளாமல், உண்மையான குறைபாடுகள் இருந்தால் அவற்றை களைந்திடவேண்டும். அதோடு நில்லாமல், குறைகள் களையப்பட்டதையும் பதில் செய்தியாக அதே ஊடகத்திற்கு நீங்கள் அளிக்கவேண்டும். இது மிக மிக முக்கியமாக நீங்கள் உங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்றை உங்கள் அனைவரிடமும் குறிப்பாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், அரசு அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக நாடிவரும் மக்களிடம் நீங்கள் ஒவ்வொருவரும் கனிவாக, பொறுமையாக நடந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.