தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேரூராட்சியில், இயங்கிவரும் ‘வளம் மீட்பு பூங்கா’வை பற்றி கேள்விப்பட்டு, அங்கு நேரில் சென்றோம். அங்கு கண்ட காட்சிகள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. அப்பூங்கா, வல்லம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள், ஆங்காங்கே கண்கவர் செடிகள், சுற்றித் திரியும் கால்நடைகள் என்று இயற்கை எழில் கொஞ்சும் விதமாக அமைந்திருந்தது ‘வளம் மீட்பு பூங்கா’. அங்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி, மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, மினி மியாவாகி காடுகள், மீன் வளர்ப்பு என்று பல முன்னெடுப்புகள் பேரூராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளை பற்றி பேரூராட்சி அலுவலரான வெங்கடேசன் நமக்கு விரிவாக விளக்கினார். அவர் பேசுகையில், “வல்லம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டுமொத்த குப்பைகளும், இங்குதான் மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தரம் பிரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, சராசரியாக 2.5 டன் மக்கும் குப்பைகளும், 1 டன் மக்கா குப்பைகளும் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக் கழிவுகளைக் கொண்டு இங்கு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் போன்ற மக்கா குப்பைகள் மற்றொரு அறையில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் உடைக்கும் இயந்திரத்தில் செலுத்தப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட இயந்திரம், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவர்களை சிறு சிறு துகள்களாக மாற்றி வெளியேற்றும். அதனை, தனியாக பெரிய மூட்டையில் சேமித்து வைத்து விடுவோம்.
அருகில் இருக்கும் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும், புதிய சாலை போடும் பணிகளுக்கு பிளாஸ்டிக் துகள்களை கிலோ 36 ரூபாய்க்கு கொடுத்து விடுவோம். பிளாஸ்டிக் துகள்களை கொதிக்கும் தார் உடன் கலந்து சாலைகளை இடும்போது, சாலைகளின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக கூறுகிறார்கள். மேலும் கண்ணாடி பாட்டில்கள், டயர்கள் போன்றவற்றை தனித்தனியே சேகரிக்கப்பட்டு அலங்கார பொருட்கள் செய்ய கொடுக்கப்படுகின்றது.
வீடுகளில் மீதமாகும் உணவு பொருட்கள் தனியே சேகரித்து, இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. மேலும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை முறையில் விளையும் பழங்கள், காய்கள் மற்றும் தயாரிக்கப்படும் இயற்கை உரம் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வல்லம் பேருந்து நிலையத்திற்கு முன்பு விற்பனை நிலையம் ஒன்றை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்துள்ளார்” என்றார்.
அங்கு வேலை செய்யும், பணியாளர்களிடம் உரையாடினோம். அவர்கள் பேசுகையில், “இங்கு திடக்கழிவு மேலாண்மையை தாண்டி பல பணிகள் நடைபெறுகின்றன. மாடுகள், நெருப்பு கோழிகள், வான்கோழிகள், முயல்கள், லவ் பேர்ட்ஸ் போன்றவையும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
அதுபோக, செயற்கையாக சிறிய அளவில் குளம் ஒன்று அமைத்து வாத்துகளும், மீன்களும் வளர்க்கப்படுகின்றன. ஒரு பகுதியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் கிட்டத்தட்ட 2000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சிறிய அளவிலான நர்சரி ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது, வீடுகளுக்கு இலவசமாக செடிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.
இது குறித்து வல்லம் பேரூராட்சியின் செயல் அலுவலர் பிரகந்த நாயகாவிடம் பேசினோம். அவர் பேசுகையில், “வல்லம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளின் மூலம் தயாரிக்கப்படும் உரங்களை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் வரை பேரூராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த விற்பனை நிலையத்திற்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை, அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கே வழங்கப்படுகிறது. பேரூராட்சி சார்பில் எடுக்கப்படும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு, மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு பெருகி வருகிறது”என்றார்.
இது போன்ற முயற்சிகளால் வருமான பெருக்கம் மட்டுமின்றி மக்களுக்கு இயற்கை மீது ஒரு விழிப்புணர்வையும், ஆர்வமும் உண்டாக்க முடியும் என்பதை வெளிக்காட்டி உள்ளது வல்லம் பேரூராட்சி. இது போன்ற முயற்சிகளை மாநகராட்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.