வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (பிப்ரவரி 17ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கல்வியில் நடக்கும் வியாபார அரசியல் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் அதிக கட்டண வசூல் பற்றியும் பேசும் திரைப்படமான வாத்தி வெங்கி அத்லூரி இயக்கத்தில் தெலுங்கு – தமிழ் என பைலிங்குவல் திரைப்படமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டையொட்டி தெலுங்கு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெங்கி அத்லூரி, ‘சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டாம்’ என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
‘வாத்தி’ திரைப்படம் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனப் பேசியுள்ளதால் தொகுப்பாளர் இயக்குநர் வெங்கி அத்லூரியிடம் ‘ஒருவேளை, நீங்கள் மத்திய கல்வித்துறை அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த வெங்கி அத்லூரி, “நான் ஒருவேளை மத்திய கல்வித்துறை அமைச்சரானால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவேன். இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும். சாதி அடிப்படையில் வழங்கக்கூடாது” என்று கூறினார். இதுதொடர்பான வீடீயோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.