ஃபேஸ்புக்கில் தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு: கர்நாடகாவில் பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே மோதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முக்கியப் பொறுப்புகளை கவனித்து இரண்டு பெண் அதிகாரிகள் பகிரங்கமாக பொது வெளியில் சண்டையிட்டு வருகின்றனர். சமூக வலைதளமான ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்தது இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இது அந்த மாநில அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பெண் உயர் அதிகாரிகளின் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்துள்ளார். அப்படி என்ன நடந்தது?

ஞாயிறு அன்று அந்த மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் ரோகிணி சிந்தூரியின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் ஐபிஎஸ் அதிகாரியான டி.ரூபா. அதோடு இந்தப் படங்களை ரோகிணி, ஆண் ஐஏஎஸ் அகதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும். அதனால், அவர் தனது பணியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதாகவும் ரூபா குற்றச்சாட்டு வைத்தார். மேலும், கடந்த 2021 மற்றும் 2022-ல் இந்தப் படங்களை மூன்று ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் ரோகிணி அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய நாள் ரோகிணி மீது நாள் நீண்ட நெடிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் பட்டியலிட்டு இருந்தார். இது தொடர்பாக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் தலைமைச் செயலாளர் வந்திதா சர்மாவிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

“இது என் மீது தனிப்பட்ட ரீதியில் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு பிரச்சாரம். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு” என்று ரோகிணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “என் மீது களங்கம் ஏற்படுத்த எனது படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவர் இதனை செய்துள்ளார். நான் எனது படங்களை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக சொல்லி உள்ளார். அவர்களது பெயர்களையும் அவர் வெளியிட வேண்டும்.

மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவமும், அது சார்ந்த ஆலோசனையும் அவசியம். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது ஆபத்தை விளைவிக்கும். என் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அவதூறு பிரச்சாரம் இது” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர் அதிகாரிகள் இருவரும் மிகவும் மோசமாக பேசி வருகிறார்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகள் சார்ந்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அதனை பொதுவெளியில் ஊடகத்தின் முன் கொண்டு வந்து பேசுவது சரியானது அல்ல என அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் பொம்மை தலையிட வேண்டும் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

ரூபா, கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ரோகிணி, இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத் துறையின் ஆணையராக உள்ளார்.

அண்மையில் ரோகிணி, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேஷுடன் உணவகத்தில் அமர்ந்திருக்கும் படம் ஒன்று சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. அப்போது இந்த சண்டை தொடங்கியதாக தகவல். ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஏன் அரசியல்வாதியை சந்திக்க வேண்டும் என ரூபா அப்போது கேள்வி எழுப்பி இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.