பணம் இல்லாமல் ஆன்லைனில் ஐஃபோன் ஆர்டர் செய்து, அதைக் கொண்டு வந்த டெலிவரி பாயை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த் நாயக் என்பவர் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். அவரை திடீரென காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 8ஆம் தேதி அவர் அரிசிகெரே பகுதியில் ஹேமந்த் தத்தா என்பவருக்கு ஐபோன் ஒன்றை டெலிவரி செய்ய சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
பணம் இல்லாமல் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனில், ஹேமந்த் தத்தா ஆன்லைனின் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த போனை ஹேமந்த் நாயக் அவரிடம் டெலிவரி செய்துள்ளார். அப்போது ஐ போனுக்கான ரூ.46 ஆயிரம் பணத்தை டெலிவரி பாய் கேட்டுள்ளார்.
வீட்டிற்குள் அமர்ந்திருங்கள் பணத்தை கொண்டு வருகிறேன் என்று சென்ற, ஹேமந்த் தத்தா, திடீரென கத்தியால் குத்தி ஹேமந்த் நாயக்கைக் கொலை செய்துள்ளார்.
பிறகு அவரது உடலை நான்கு நாட்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். கடந்த 11ஆம் தேதி இரவு உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே இருந்த ரயில் தண்டவாளத்திற்கு எடுத்துச் சென்று எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in