கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர், பேராசிரியர் ஜி.ஆர்.தாமோதரனின் பிறந்தநாளை பி.எஸ்.ஜி குழுமத்தின் பணியாளர்கள் தினமாக கல்லூரி அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்பது உன்னதமான நோக்கம். பொதுவாக பணியாளர்கள் தினம் கொண்டாடும் நிறுவனங்கள் குறைவு. பிஎஸ்ஜி நிறுவனம் பல விதத்தில் முன்னோடியாக உள்ளது. பணியாளர் தினம் எல்லா நிறுவனங்களும் முன்னெடுத்துச் செல்லலாம் என்பது எனது யோசனை என்றார்.
திறைமைசாலிகளை அடையாளம் காணுங்கள்
ஆளுநர்கள் பிரதமராலும், உள்துறை அமைச்சராலும் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால், தமிழக மக்கள் அப்படி அடையாளம் காணவில்லை. தமிழக மக்கள் எங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்திருந்தால் இந்நேரம் நானும் மந்திரியாகி இருப்பேன். தமிழக மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை அதனால்தான் ஆளுநர்களாக எங்களை மேலிடமே தேர்ந்தெடுக்கிறது.
தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள்.
பேஸ்புக்கில் ஆயிரம் ஓட்டு வாங்க முடியாதா 2000 ஓட்டு வாங்க முடியாதா.? என எழுதுவீர்கள்.அது யார் தவறு? மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருவதற்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த சிந்தனை வந்தால் அதைப் பற்றி பேசுவோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அண்ணாமலையிடம் கேளுங்கள் நான் கட்சி தலைவர் கிடையாது நான் ஆளுநர் என தெரிவித்தார்.