தேமுதிக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், அக்கட்சி எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.
இடைத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவது யார்?இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியின் கையே ஓங்கியிருக்கும் என்று கூறப்படுவது உண்டு. பண பலம், அதிகார பலம் இவற்றை கடந்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ இருந்தால் தான் தொகுதிக்கு சில திட்டங்கள் கிடைக்கும் என்று மக்களும் எண்ண வாய்ப்பு இருக்கிறது. பிரதான எதிர்கட்சியோ ஆளும் கட்சியை வீழ்த்தி மக்கள் மத்தியில் அரசு மீது இருக்கும் அதிருப்தியை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இடைத்தேர்தலை பயன்படுத்துகின்றனர்.
புறக்கணித்த பாமகஇதனால் இரு பிரதான கூட்டணிகளில் அங்கம் வகிக்காத கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டு வேடிக்கை வாய்ப்பதை பல சமயங்களில் பார்த்திருக்கிறோம். சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததோடு, யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தது.
முடிவை மாற்றிய அமமுக, மநீமமக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசன் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது. திமுக ஆட்சியில் இப்போது நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லை ஆனால் இம்முறை திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. அமமுக போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆனால் குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.
தனித்து பயணிக்கும் நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி ஆரம்பம் முதல் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதோடு, தனித்து களம் கண்டு வருகிறது. இம்முறையும் அதையே செய்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக களம் காண்பதும், பிரச்சாரத்தில் வேகம் காட்டுவதும் கவனம் பெற்று வருகிறது. அதிமுக, திமுக கூட்டணியை எதிர்த்து தேமுதிக இடைத்தேர்தலில் களம் காண்பது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.
ஈரோடு விஜயகாந்த் கோட்டையா?விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்பு அவரது ரசிகர் மன்றங்கள் பட்டி தொட்டி எங்கும் பரவி இருந்தது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். ரசிகர்களின் ஆதரவோடு அவர் கட்சி தொடங்கி எதிர்கட்சித் தலைவர் பதவி வரை முன்னேறினார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் தீவிர அரசியலில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன்பின்னர் அக்கட்சி எடுத்த முடிவுகளால் தேர்தலில் வெற்றி ஈட்ட முடியாமல் போனது. வாக்கு வங்கியும் தேயத் தொடங்கியது.
விஜய பிரபாகரன் எண்ட்ரி!இந்நிலையில் கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டும், தோல்வியில் துவண்டு போன தொண்டர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளனர். 2011 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த போது தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி இது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை தேமுதிக பயன்படுத்துகிறது.
ஈரோடு கிழக்கு – என்ன பலன் கிடைக்கும்?
தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதம் உயர்ந்தால் தொண்டர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இதை வைத்து மக்களவைத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு அழைத்தாலும் சீட் எண்ணிக்கையை உயர்த்த பேரம் பேச வசதியாக இருக்கும் என திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.