ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சி.வி.சண்முகம் வழக்கு முடித்து வைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்று, தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனு விவரம்!

அந்த மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு கேமரா பதிவு செய்ய வேண்டும், வீடியோ பதிவு செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப் தாக்கல் செய்த அறிக்கையில், தேர்தல் நடைமுறைகள் துவங்கிய பின் அதில் தலையிடும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், தேர்தலில் முறைகேடுகள் நடக்கும் என மனுதாரர் அச்சம் தெரிவிக்க எந்த காரணங்களும் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

ஆதாரமே இல்லை!

தொகுதியில் வசிக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனவும், அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு எனவும் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர், தொகுதியில் வசிக்காதவர்களின் பட்டியல் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்பட்டு, அதை சரிபார்த்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் எனவும், இறந்தவர், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியல் ரகசியமானது எனவும், அதை வெளியிட்டால் ஆள்மாறாட்டம் செய்ய வாய்ப்புண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

பூத் ஸ்லிப்கள் கட்சி ஏஜெண்ட்களால் வினியோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும், தேர்தல் அலுவலர்கள் மூலம் மட்டுமே வினியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்பாடுகள் தீவிரம்!

மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க 12 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதியில் உள்ள 238 வாக்கு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா, வெப் காஸ்டிங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் 409 சி ஆர் பி எப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், பதட்டம் நிறைந்த 34 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வழக்கு முடித்து வைப்பு!

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.