திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் பிரபல சைவ ஹோட்டலில், தான் சாப்பிட்ட உணவுக்கு பில்லில் உண்மையான தொகையைவிட, குளறுபடி செய்து கூடுதல் பணம் அச்சிடப்பட்டிருந்ததாக, அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டவர் ஒருவர் சமூகவலைதளங்களில் பில்லோடு வெளியிட்ட பதிவு வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், நடந்தது என்ன என்பதை அறிய நாம் அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்தோம். “தொழில்நுட்ப பிரச்னையால் உணவுக்கான தொகையை விட அதிகமாக முதலில் பில் வந்தது. ஆனால், அந்த கஸ்டமர் சுட்டிக்காட்டியதும், உடனே சரிசெய்து, சரியான தொகைக்கான வேறு பில்லை அடித்துக் கொடுத்தோம்’’ என்று கூறி, அதற்கான ஆதாரங்களைக் காட்டினர்.
நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு நகரில், சங்ககிரி சாலையில் அமைந்திருக்கிறது, ஈரோடு பொன்னுசாமி என்ற பெயரிலான சைவ உணவகம். கடந்த 14-ம் தேதி காலை அந்த ஹோட்டலுக்கு, திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவர் டிபன் சாப்பிடச் சென்றுள்ளார். அவர் இரண்டு இட்லி, ஒரு செட் பூரி, ரோஸ்ட் ஒன்று, இரண்டு மினி வடை என்று டிபன் சாப்பிடுள்ளார்.
இறுதியில், சர்வர் மூலம் அவருக்கு பில் வந்துள்ளது. அந்த பில்லில், இரண்டு இட்லிகள் ரூ. 30, ஒரு செட் பூரி ரூ. 72, ஒரு ரோஸ்ட் ரூ. 60, இரண்டு மினி வடைகள் ரூ. 20, ஜி.எஸ்.டி ரூ. 8.10 என மொத்தம் ரூ. 190 என பில் வர வேண்டிய நிலையில், தனக்கு வந்த பில்லில் மொத்தம் ரூ. 443 என்று தொகை குறிப்பிடப்பட்டிருக்க, அந்த பில்லை போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார் அவர்.
அந்தப் பதிவில், `இனிமேல், உணவகங்களில், சென்று சாப்பிட்டால், சர்வர் தரும் பில்லை, ஒரு முறைக்கு, இரு முறை நன்கு செக் பண்ணி விட்டு, பணம் செலுத்துங்கள்! ஓட்டல் முதலாளிகள், மக்களை கொள்ளை அடிக்க இப்படியும் ஒரு வழி! ஏம்பா இதெல்லாம் ஒரு பொழப்பா! அவ்…’ என்று குறிப்பிட்டிருக்க, அந்தப் பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து ஹோட்டல் பில் பற்றிய கருத்துகள் சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட, நாம் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக விசிட் அடித்தோம். ஹோட்டல் உரிமையாளர் நல்லகுமாரிடம் பேசினோம்.
“அன்று அந்த கஸ்டமர், 190 ரூபாய்க்கான உணவைதான் சாப்பிட்டார். ஆனால் பில் அடிக்கும்போது, தொழில்நுட்ப பிரச்னை வந்திருக்கிறது. அதோடு பில் அடிப்பவர், ஒவ்வோர் உணவுக்கான கோடை அடிக்கும்போது, வேறு உணவுக்கான கோடை (code) தவறுதலாக அடித்துவிட்டார். இதனால் மொத்த பில் தொகை ரூ. 443 என்று வந்துவிட்டது. அதை பில் அடிப்பவரும், சர்வரும் கவனிக்காமல் கஸ்டமரிடம் கொடுத்துவிட்டனர். ஆனால், கஸ்டமர் அதைச் சுட்டிக்காட்டியதும், உடனே அவரிடம், ‘டெக்னிக்கல் பிரச்னையால் நடந்த தவறு இது. நடந்த தவற்றுக்கு வருந்துகிறோம். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ என்று முதலில் மன்னிப்புக் கேட்டோம்.
பிறகு, அவர் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகையான ரூ. 190க்கு புது பில் அடித்து கொடுக்கப்பட்டது. அதைக் கொண்டு, அந்த கஸ்டமர் ரூ. 190 யை ஜிபே மூலம் எங்களுக்கு செலுத்தினார். பழைய பில்லை அவர் சமூகவலைதளங்களில் பதிவு செய்து, ஹோட்டல் முதலாளிகள் மக்களை கொள்ளையடிப்பதற்காக இப்படி செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, உடனே பில்லை சரிசெய்து கொடுத்துவிட்டோம். அவர் புகார் செய்தபோது அதை ஏற்றுக் கொண்டு பில்லை திருத்திக் கொண்டோம். சரியான தொகையைத்தான் பெற்றுக் கொண்டோம். திருத்தப்பட்ட பில்லில் தேதி, நாள் எல்லாம் ஃபிப்ரவரி 14- அன்று சம்பவம் நடந்தபோது உள்ளபடி பதிவாகியிருப்பதை செக் செய்து கொள்ளுங்கள். அதேபோல், அவர் எங்களுக்கு ரூ. 190ஐ ஜிபே பண்ணியதற்கான ஆதாரம் இது’’ என்று அவற்றை காட்டினார்.
“நடந்தது தவறுதான். ஆனால் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல. எங்கள் ஹோட்டலின் நேர்மை, உணவுப் பொருள்களின் தரம் பற்றி இங்குள்ள கஸ்டமர்கள் அனைவருக்கும் தெரியும்” என்றார்.
`இந்த கஸ்டமர் பில்லை செக் செய்ததால் பிழை தெரிந்தது. பில்லை சரிபார்க்காமல் தொகையை செலுத்தியிருந்தால் யாருக்கு நஷ்டம்?’ என்ற கமென்ட்களை, சம்பந்தப்பட்ட ஹோட்டல் பில் பதிவில் அதிகம் பார்க்க முடிந்தது.
இந்த விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் மீது தவறு இருக்கிறது. அதே நேரம் நுகர்வோரான நாம், ’கம்ப்யூட்டரில் தரப்படும் பில் தானே, தவறு இருக்காது’ என்று அலட்சியமாகக் கருதக்கூடாது. பொருள்களுக்கான குறியீடு மாறலாம்; அல்லது எண்ணிக்கை மாறலாம் என்பதால் ஓட்டல், மளிகைக் கடை என எங்கு தரப்படும் பில்லையும் அங்கேயே சரிபார்த்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம்.
தொழில்நுட்பக் கோளாறு, மனித தவறு என எதுவும் நேரலாம் என்பதால்… எந்த பில்லையும் கஸ்டமர்கள் சரிபார்த்த பின்னரே கட்டணம் செலுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒருவேளை தவறு நேர்ந்திருந்தால் கண்டுபிடித்து, சுட்டிக்காட்டி, பணத்தை இழக்காமல் இருக்க முடியும்.