குஜராத்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தொழிலதிபர் கவுதம் அதானி தள்ளப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, முதல் வாரத்தில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
தொடர்ந்து, ரூ.20,000 கோடி மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் பணம் திரும்பி அளிக்கப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்ததை அடுத்து கவுதம் அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ரூ.9,92,000 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.3,96,670 கோடியாக சரிந்துவிட்டது. அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.22,313 கோடி வீழ்ச்சியால் கோடீஸ்வரர் பட்டியலில் 25வது இடத்துக்கு சரிந்தார்.