புதுடெல்லி: டெல்லியில் ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசியின் வீடு டெல்லியின் அசோகா சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், ஜன்னல்களை சேதப்படுத்தியதாகவும் அசாதுதீன் ஒவைசியின் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒவைசி கூறுகையில், ‘ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் எனது வீடு தாக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணியாளர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பார்லிமென்ட் தெரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற தாக்குதல் நடப்பது முதல் முறையல்ல; தற்போது வரை நான்கு முறை நடந்துள்ளது. வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன; போலீசார் அதனை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்றார். முன்னதாக இரண்டு நாள் பயணமாக விரைவில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானுக்கு ஒவைசி சென்றிருந்தார். அங்குள்ள பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுனைத் (35) மற்றும் நசீர் (25) ஆகியோர், பசு காவலர்களால் கடத்தப்பட்டு எரிக்கப்பட்டதால் அவர்களின் குடும்பத்தினரையும் ஒவைசி சந்தித்து ஆறுதல் கூறினார்.