ஒரே மாதத்தில் இவ்ளோ வீழ்ச்சியா! ரூ.4.13 லட்சம் கோடியாக சரிந்தது அதானியின் சொத்துமதிப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் தொடர் சரிவுகளைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி, அதானியின் நிகரமதிப்பானது 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (4.13 லட்சம் கோடி ரூபாய்) குறைவாகவே உள்ளது.
இன்றுவரை சரிவைச் சந்திக்கும் அதானி குழும பங்குகள்
அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் வளர்ச்சி அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. அந்த குழுமம், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்த திட்டம், எஃபி.பி.ஓ. பங்குகளைத் திரும்பப் பெற்றல் என தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும், தினந்தோறும் அது சந்திக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் சில பங்குகள், இன்றுவரை சரிவையே கண்டுவருகின்றன.
image
இன்றைய தேதியில் அதானியின் மதிப்பு
அதன்படி, கெளதம் அதானியின் நிகரமதிப்பானது இன்றைய தேதியில், 50 பில்லியன் டாலர்களுக்கும் குறைவாகவே உள்ளது. ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி, கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 49.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போது 4,910 கோடி அமெரிக்க டாலராக (கிட்டதட்ட 4 லட்சம் கோடி ரூபாய்) இருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் அதானியின் சொத்து மதிப்பு 12000 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள் அதானி சொத்து மதிப்பு 7100 கோடி டாலர் குறைந்துள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 819 சதவீதம் அதிகரித்தது. அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3ம் இடத்தில் இருந்தார். இந்தச் சூழலில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அவருடைய குழும பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.
image
ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
அந்த அறிக்கைக்கு அடுத்த நாளே (ஜனவரி 25) அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ரூ.50,000 கோடிக்கு மேல் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அறிக்கையின் காரணமாக, கடந்த 3 வாரங்களில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மதிப்பானது, சுமார் 120 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த ஒரு மாதத்துக்கள் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
image
அதானிக்கும் அம்பானிக்கும் ஏற்பட்ட இடைவெளி
இதனால், கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து 25வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த வாரம், அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 24வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து பெரியளவில் அதிகரித்து வருகிறது. முகேஷ் அம்பானி தற்போது சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு 83.6 பில்லியன் டாலராக உள்ளது என ப்ளூம் பில்லியனர் இன்டெக்ஸ் அறிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.