கட்டான விமான நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டில் இருக்கும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அதற்கான வரைவு அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளது.
கட்டான நகர அபிவிருத்தி திட்ட வரைவு பற்றிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (17ஆம் திகதி) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கட்டுநாயக்க சீதுவ மாநகர சபை மற்றும் கட்டான பிரதேச சபை ஆகிய 2 நகர அபிவிருத்தி பிரதேசங்களுக்கு கட்டான நகர அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2023 முதல் 2033 ஆண்டுகளில் செயற்படுத்தப்படும். போக்குவரத்து, விமான களஞ்சியம் மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்கும் உலகப் புகழ்பெற்ற விமான நிலையமாக கட்டுநாயக்க சீதுவ பிரதேசத்தை உருவாக்குவதும் கட்டான பிரதேசத்தை தன்னிறைவு பொருளாதாரத்துடன் வசதியான நகரமாக மாற்றுவதும் இதன் நோக்கமாகும்.
இங்கு கட்டான நகர அபிவிருத்தி திட்டத்தின் வரைவு பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கோகிலா குணவர்தனவினால் கட்டுநாயக்க சீதுவ மாநகர சபையின் தலைவர் சமித் நிஷாந்த மற்றும் கட்டான பிரதேச சபையின் தலைவர் சிசிர பெர்னாண்டோ ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
இவ்விரு உள்ளூராட்சி மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களினதும் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக இந்த வரைவு அவர்களுக்கு வழங்கப்படும். அதற்கு 60 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டும். அதன் பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது கட்டான நகர அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி அதிகார சபையானது நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்படும் இது 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.
கட்டான நகர மேம்பாட்டுத் திட்டம் “உலகளாவிய விமான நிலைய மற்றும் வசதி வய்ப்புள்ள நகர்ப்புறம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்படுகின்றது. பொருளாதார மற்றும் சுற்றுலா மேம்பாடு, காணி மற்றும் கட்டிட மேம்பாடு, நிலையான சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய முக்கிய மூலோபாயத்தின் அடிப்படையில் கட்டான நகரத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கட்டான நகரம் மாகாணங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்துகின்ற நகரமாகும். கொழும்பு – புத்தளம் பிரதான வீதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ராகம – புத்தளம் புகையிரத பாதை ஆகியன இந்த நகரத்தின் ஊடாக செல்கின்றன. இந்த பிரதேசத்தின் எல்லையின் அளவு 107 சதுர கிலோமீட்டர். இதன் குடியிருப்பு பகுதி 55% ஆகும். விவசாய தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி 21% ஆகும். கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை 79 ஆகும். மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து ஐம்பத்து மூவாயிரம் ஆகும்.
இலங்கையின் முதலாவது சுதந்திர வர்த்தக வலயமான கட்டுநாயக்க வர்த்தக வலயம், நாட்டின் முதலாவது சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையம், தென்மேற்கு இலங்கையின் மிகப்பெரிய கடல்நீரேரியான நீர்கொழும்பு கடல்நீரேரி மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற ஈரநிலமான முத்துராஜவெல சரணாலயம் ஆகியவை இந்த பிரெதேச எல்லையில் அமைந்துள்ளன.
கட்டான பிரதேச சபையின் உப தலைவர் சமிந்த ரத்நாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த ஹரிஷ்சந்திர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்தா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எம்.பி. ரணதுங்க, பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹேமால் லக்பதும் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.