விவாகரத்துக்கள் அதிகரித்துவரும் ஒரு காலகட்டத்தில், கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்வதால் உருவாகும் பிரச்சினைகளைத் தவிர்த்து இருவரும் இன்பமாக வாழ்வதற்கு உதவும் புதிய திருமண முறை ஒன்று ஜப்பானில் ட்ரெண்டாகிவருகிறது.
அது குறித்து கனேடிய நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
ஜப்பானில்,’weekend marriage’ அல்லது ’separation marriage’ என்னும் ஒரு புதிய திருமண முறை பிரபலமாகிவருகிறது. அதாவது, திருமணமான கணவனும் மனைவியும் வெவ்வேறு வீடுகளில் வசிப்பது, வார இறுதிகளில் மட்டும் இணைந்துவாழ்வதுதான் இந்த புதிய திருமண முறையாகும்.
வயதாகும்போது, தம்பதியர் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வார்கள் என்ற நிலை நிலவினால், இருவரும் மீண்டும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழலாம்.
ஒரே வீட்டில் வாழ்வதால் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் இந்த புதிய முறைகளால் தவிர்க்கப்படும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
கனேடிய நிபுணர்களின் கருத்து
இந்த திருமண முறை இன்னமும் கனடாவைத் தொற்றிக்கொள்ளவில்லை என்றாலும், நகர மக்கள் பலர் தங்கள் வேலை காரணமாக பிரிந்துவாழும் ஒரு நிலை இப்போதே பல நகரங்களில் காணப்படுகிறது.
அதாவது, கணவன் ஒரு இடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் தூரமாக வேலை பார்க்கும் நிலையில், வார இறுதிகளில் மட்டும் அவர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பி வாழ்க்கை நடத்தும் ஒரு நிலை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
கனடாவில் விவாகரத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய முறைத் திருமணம் விவாகரத்து பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என கருதப்படுகிறது. கணவனும் மனைவியும் வெவ்வேறு வீடுகளில் வாழ்ந்து, வார இறுதிகளில் மட்டும் சேரும்போது, பிரச்சினைகள் குறையலாம், அவர்கள் இருவரும் தங்கள் விருப்பங்களின்படி, கொள்கைகளின்படி வாழலாம் என சில கனேடிய நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அதேநேரத்தில், கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம் என்று வாழும் நிலையில், எப்போதும் ஒருவருக்கு மற்றவரைக் குறித்த ஒரு கவலை காணப்படுவதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் வேறு சிலர். தங்கள் கணவன் அல்லது மனைவியுடன் இணைந்து செலவிடும் சில முக்கிய தருணங்களை வாழ்வில் இழக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்வதாகவும், ஒருவர் புகழ் பெற்று வாழ்பவராக இருக்கும்போது, கூட அவரது கணவன் அல்லது மனைவி இல்லாமல் இருக்கும் ஒரு வாழ்க்கை அச்சுறுத்தல் என்கிறார்கள் சிலர்.
ஆனால், இவர்கள் யாரும் குழந்தைகளைக் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தந்தை ஓரிடம், தாய் ஓரிடம் என வாழும்போது, பிள்ளைகளின் மன நிலை எப்படி இருக்கும், பதின்ம வயதை எட்டும்போது ஏற்படும் பிரச்சினைகளின்போது தங்களுக்கு ஆதரவாக தந்தையும் தாயும் கூட இருக்கும்போது கிடைக்கும் அசுர பலம், தாங்கள் பின்னாட்களில் திருமண வாழ்வுக்குள் செல்லும்போது ஏற்படப்போகும் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என பெற்றோரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுதல் என பல விடயங்கள் குடும்பங்களில் கிடைக்கும் நிலையில், தந்தை ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம் என வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதை குடும்ப வாழ்க்கை என்றோ, திருமண வாழ்க்கை என்றோ குறிப்பிட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாராவது பதிலளித்தால் நன்றாக இருக்கும்!