திருச்சியில், கொள்ளையடித்து மறைத்து வைத்திருக்கும் நகைகளை எடுத்துத் தருவதாகக் கூறி போலீசாரை அழைத்துச் சென்ற ரவுடி சகோதரர்கள், திடீரென ஜீப்பின் போக்கை திசை திரும்பி, ஜீப்பிலிருந்த போலீசாரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
திருச்சி அருகிலுள்ள புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி சகோதர்களான துரைசாமி, சோமசுந்தரம் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அண்ணன் துரைசாமி மீது 5 கொலை வழக்குகள் , கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட 69 வழக்குகளும், தம்பி சோமசுந்தரம் மீது 3 கொலைகள் உள்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை ஐந்து 30 மணியளவில் இவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து கைது செய்த உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் இருவரிடமும் நகை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, கொள்ளையடித்த நகைகளை ஒதுக்குப்புறமான குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து இருவரையும் தங்களது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போலீசார் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, சோமசுந்தரம் திடீரென ஜீப்பின் ஸ்டியரிங்கை வளைத்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையிலிருந்து கீழே இறங்கியது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டிய போது, தங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு ஜீப்பிற்குள் வைத்திருந்த கத்தி, அரிவாளை எடுத்து போலீசாரை தாக்க தொடங்கினர். இதில், ஆய்வாளர் மோகன், ஏட்டுகள் அசோக், சிற்றரசு ஆகிய 3 பேருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால், ஆய்வாளர் மோகன் ரவுடிகளின் முழங்காலில் சுட்டு அவர்களை மடக்கிப் பிடித்தார். காயமடைந்த போலீசார் மற்றும் குண்டடிப்பட்ட 2 ரவுடிகளும் பேரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கி சூடு நடத்த இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியபிரியா போலீசாரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை என்று கூறினார்.
கொலை கொள்ளை என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.