நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியில்லாமல் வளர்க்கப்பட்ட இரண்டு அலெக்சாண்டரியன் கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டு கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கிளிகளை அனுமதியின்றி வளர்த்ததற்காக இன்று இரண்டரை ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை அதிர்ச்சியூட்டியிருக்கிறது.
இதுகுறித்து, ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கரிடம் பேசியபோது,
“நாங்கள் இருக்கும் சூழலுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்ப பெரியத்தொகை. இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம்தான். ஆனாலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். நாங்கள் இல்லாத நேரத்தில் கிளிகளை எடுத்துச் சென்றார்கள். தற்போது, ஊரிலிருந்து வந்துவிட்டோம். இன்னும் வனத்துறை அதிகாரிகளை நேரில் பார்க்கவில்லை.
எனது கணவர் ஷூட்டிங், டப்பிங் பணிகளில் இருப்பதால் போனில்தான் பேசிக்கொண்டிருக்கிறார். ‘கிளிகளை வளர்க்கக்கூடாது என்று தெரியாததால்தான் வளர்த்தோம்’ என்று வனத்துறையினரிடம் கணவர் கூறினார். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வேளச்சேரிக்கு நேரில் சென்று விளக்கமளிக்கவுள்ளோம். உண்மையிலேயே, வனத்துறையினரிடம் மறைக்கவேண்டும் என்ற எந்தத் திட்டமிட்ட நோக்கமும் இல்லை. ஏனென்றால், கிளிகளைப் பணம் கொடுத்து வாங்கவில்லை. கிஃப்டாக வந்த கிளிகள் இவை. முகப்பேரில் இருந்த என் தோழி ரயில்வே துறையில் பணிபுரிகிறார். ‘வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்கிறேன். அங்கு வளர்க்கமுடியாத சூழல் இருப்பதால், நீங்களே வளருங்கள்’ என்றுக்கூறி என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
எனக்கும் இந்த வகைக் கிளிகளை வளர்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்கேற்றாற்போல், பிகிலும், ஏஞ்சலும் கிஃப்டாகக் கிடைத்தன. என் மகள் ‘பிகில்’ படத்தில் நடித்தபிறகு, வீட்டிற்கு வந்த கிளிகள் என்பதால் ‘பிகில்’, ‘ஏஞ்சல்’ என்று பெயரிட்டோம். எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக, என் கணவரை ரோபோ என்று செல்லமாக அழைக்கும். எங்களுடன் அவ்வளவு பாசமாக இருந்தன. சமையல் செய்யும்போது தோள்மீது அமர்ந்துகொள்ளும். இந்த மூன்றரை வருடங்கள் எங்கள் குழந்தை மாதிரிதான் பார்த்துக்கொண்டோம். கிஃப்டாக தோழி கொடுத்த கிளிகளுக்கு எப்படி அனுமதி பெறமுடியும்? நாங்கள் ஒன்றும் விலை கொடுத்து வாங்கவில்லையே? அதனால்தான், வனத்துறையினரிடம் தெரிவிக்கவில்லை.
பச்சைக்கிளி என்பது எல்லோருக்கும் பிடித்தமானது. அப்படியிருக்கையில், கிஃப்டாக கிடைத்ததை வேண்டாம் என்று எப்படி சொல்லமுடியும்? வனத்துறையின் விதிமுறைகள் தெரிந்திருந்தால் முன்னரே விட்டிருப்போம். இது தெரியாமல் நடந்த தவறுதான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகச் செல்லமாக வளர்த்தோம்.
தற்போது, கிளிகள் போனதோடு அபராதமும் விதிக்கப்பட்டிருப்பது கஷ்டமாக உள்ளது” என்று தங்களது தரப்பு நியாயத்தை பகிர்ந்துகொள்பவரிடம், “நீங்கள் சினிமாத்துறையில் இருப்பதால்தான், இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறதா?” என்றோம்.
“இப்படி நடப்பது முதல்தடவை என்பதால், எங்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய அபராதத்தொகை விதித்திருக்கிறார்களா என்பது தெரியாது. ஏற்கெனவே, பறவையை வளர்த்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால், இது ரொம்பப் பெரியத்தொகைதான்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.