கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

சியோல்,

வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளை அவ்வப்போது நடத்தி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை கைவிடும்படி அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதனை வடகொரியா கண்டு கொள்ளவில்லை. மேலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று செலுத்தி பரிசோதனை செய்து உள்ளது. இதனை தென்கொரியாவும் உறுதி செய்து உள்ளது.

இதுபற்றி தென்கொரியாவின் கூட்டு படைகளின் தளபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, வடகொரியாவின் சுக்சோன் பகுதியில் காலை 7 மணி முதல் 7.11 மணிக்குள் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட நிகழ்வை பார்த்தோம் என கூறியுள்ளார்.

நாங்கள் கண்காணிப்பு மற்றும் தீவிர மேற்பார்வை செய்து வருவதுடன், அமெரிக்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் எங்களது ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து விமான பயிற்சிகளில் நேற்று ஈடுபட்டன. இந்த பயிற்சியின்போது, தென்கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பி-1பி என்ற குண்டு வீசும் விமானம் ஒன்று பறந்து சென்றது. அதற்கு பாதுகாப்பாக அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்களும், அதனுடன் தென்கொரியாவின் எப்-35ஏ ரக போர் விமானங்களும் மற்றும் எப்-15கே விமானங்களும் பறந்து சென்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன் (18-ந்தேதி) வடகொரியா ஏவிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனை பரபரப்பு ஏற்படுத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளது என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறினார்.

இந்த ஏவுகணை சோதனையானது வடகொரியாவின் எதிர் தாக்குதல் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணை முழு திறனை எட்டியுள்ளது என்றும் வடகொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்தே உடனடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து போர் பயிற்சிகளில் நேற்று ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், வடகொரியா இன்று 2 ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி உள்ளது. இந்த ஆண்டில் எதிரி நாடுகளை தூண்டி விடும் வகையில், வடகொரியா மேற்கொள்ளும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.