குழந்தையா? இதயமா? – ஒரேநேரத்தில் இரு அறுவைசிகிச்சைகளை நிகழ்த்தி லக்னோ மருத்துவர்கள் சாதனை!

இதய அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு பெண்.
லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக்கழக மருத்துவர்கள் இருவேறு சவாலான அறுவைசிகிச்சைகளை ஒரேநேரத்தில் மேற்கொண்டு தாய் – சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளனர்.
உத்தராகண்டைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கர்ப்பமடைந்ததை அடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகியுள்ளார். அந்த பெண்ணுக்கு தீவிர இதய பிரச்னையும் இருந்ததால் அறுவைசிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் வயிற்றில் கருவும், இதய பிரச்னையும் ஒருசேர இருந்ததால் உத்தராகண்டிலுள்ள பல்வேறு மருத்துவர்கள் அந்த பெண்ணை மேற்சிகிச்சைக்காக கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக்கழகத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இருப்பினும், இரு உயிரையும் காப்பாற்றுவது மிகவும் சவாலானதாக இருந்ததாக கூறுகிறார் அறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் சுதிர் சிங்.
image
”உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சவாலான அறுவைசிகிச்சையானது கர்ப்பிணிக்கு மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல்முறை. பெரும்பாலும் இதுபோன்ற நோயாளிகளுக்கு பிரசவ வலி வந்தவுடனோ அல்லது மயக்க மருந்து செலுத்தியவுடனோ அவர்கள் இதயம் அதனை தாங்கிக்கொள்ள இயலாமல் உடனடியாக நிலைகுலைந்துவிடுவர். இதனால் நிறைய மருத்துவமனைகளில் அந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள மறுத்துவிட்டனர்.
அந்த பெண் இறப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தபோதிலும் ஒரேநேரத்தில் அந்த பெண்ணுக்கு சி – செக்‌ஷன் மற்றும் இதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவர்கள், இதய மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற பல்வேறு துறையினரிடம் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிர்ஷ்டவசமாக தற்போது தாய் – சேய் இருவரும் நலமுடன் உள்ளனர்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.