சடலங்கள் எரிப்பு, உடல் உறுப்பு திருட்டு புகார் குறித்து விழுப்புரம் ஆசிரம நிர்வாகியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

விழுப்புரம்: விழுப்புரம் ஆசிரம வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகி மற்றும் அவரது மனைவியை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். சடலங்கள் எரிப்பு, உடல் உறுப்பு திருட்டு தொடர்பாகவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர பெங்களூரு ஆசிரமத்திற்கு சென்றும் விசாரிக்க உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜுபின்பேபி. இவர் கோவை, விழுப்புரம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளார். பல்வேறு புகார்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் ஆசிரமத்தில் 145 பேர் தங்க வைக்கப்பட்டிருந்ததும், ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட சிலர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், பலர் காணாமல் போனதாகவும் புகார் அளித்தனர்.

அதன்பேரில் ஆசிரம நிர்வாகி ஜுபின்பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த ஆசிரமத்திலிருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேரை, பெங்களூருவில் தனது நண்பர் நடத்தும் ஆட்டோ ராஜா காப்பகத்திற்கு ஜுபின்பேபி அனுப்பி வைத்ததாகவும், அதிலிருந்து 11 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இது மட்டுமன்றி ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற காப்பகங்களுக்கும் ஜூபின்பேபி, மனநலம் பாதித்தவர்களை அனுப்பி வைத்ததாகவும் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டர் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையர் தலைவர் குமாரி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட 15 பெண்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த ஆசிரமத்திலும் சோதனை நடத்தினர். அதில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளதாகவும், தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து விட்டு சென்றனர். இந்நிலையில், சிறையில் உள்ள ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியா ஆகிய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

எத்தனை பேர் இதுவரை தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். கர்நாடகா, ராஜஸ்தான் மேற்குவங்க மாநில காப்பகத்திற்கு எத்தனை பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, 300 அனாதை பிணங்களை எரித்ததாகவும், உடலுறுப்பு திருடியதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாகவும் அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன ஜாபருல்லா உள்ளிட்ட 53 பேர் கடந்த 2021ம் ஆண்டு பெங்களூரு ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்ததாக ஜூபின்பேபி தெரிவித்துள்ளார்.

இதற்கான ரசீதும் பெற்றுள்ளதாக அவர் செஞ்சி போலீசாரிடம் கூறியிருந்தார். ஆனால் போலீசார் விசாரணைக்கு சென்றபோது, பெங்களூரு ஆசிரம நிர்வாகி ஆட்டோ ராஜா முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதில் 20 பேர் உடல் நலம் சரியாகி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், 20 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 13 பேர் மட்டும் பாத்ரூம் கம்பியை அறுத்துக் கொண்டு தப்பி விட்டதாகவும், அதில் இரண்டு பேர் விழுப்புரம் வந்துவிட்டதாகவும், மற்ற 11 பேரை காணவில்லை என்றும் ஆட்டோ ராஜா தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணைநடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.