புதுடெல்லி: இந்து ராஜ்ஜியம் அமைய, முஸ்லிம் ஜிகாதிகளை கொல்வதுதான் ஒரே வழி என உத்தரப்பிரதேசத்தின் துறவி பஜ்ரங் முனி தாஸ் அறிவித்துள்ளார். இவர் இதேபோன்ற சர்ச்சை கருத்தை ஏற்கெனவே கூறி கைதாகி ஜாமீனில் உள்ளவர்.
உ.பி.,யின் தலைநகரான லக்னோவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலுள்ள சீதாபூரின் ஹைதராபாத்தில் ஸ்ரீலஷ்மண் தாஸ் உதாசி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் தலைவராக இருப்பவர் துறவி, பஜ்ரங் முனி தாஸ்.
இவருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அரசு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இவர் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் எனவும், அவர்களது குடும்பப் பெண்களை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்றும் கூறி, கடந்த ஏப்ரல் 13 இல் கைதாகி இருந்தார்.
பிறகு இதற்காக நீதிமன்றத்தில் பொது மன்னிப்பு கோரியவருக்கு, கடந்த ஏப்ரல் 24 இல் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், சிறையிலிருந்து வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம், ‘நான் கூறிய கருத்தின் மீது எனக்கு வருத்தம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், துறவியான பஜ்ரங் முனி மீண்டும் கூறிய கருத்தின் மீது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் வீடியோ பதிவு உபியின் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து துறவி முனி தனது கருத்தில், ‘கடந்த காலங்களில் இந்தியா ஒரு அமைதி நாடாக இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த அமைதி, முஸ்லிம்கள் நம் நாட்டில் நுழைந்தபின் அழிக்கப்பட்டது. இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முஸ்லிம் ஜிகாதி கொள்கைகள் கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும். இதை செய்தால்தான் உடனடியாக நம் நாடு இந்து ராஜ்ஜியம் ஆகும்.’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 இல் உ.பி.,யின் முதல்வராக யோகி அமர்ந்தது முதல் பஜ்ரங் முனி உள்ளிட்டப் பல துறவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளார். துறவி முனி கடந்த வருடம் கைதான போதும் அவருடன் இரண்டு உபி போலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்த வீடியோ கருத்து தனதுதான் எனவும் செய்தியாளர்களிடம் துறவி முனி உறுதி செய்துள்ளார். இவரது கருத்தை பல முஸ்லிம் மவுலானாக்கள் கண்டித்துள்ளனர்.
இதன் மீது உ.பி.யின் லக்னோ மவுலானாவான சூபியான் நிஜாமி கூறுகையில், “இந்து ராஜ்ஜியத்தில் முஸ்லிம்கள் அகற்றப்படுவார்கள் என்பதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். ஆனால், முஸ்லிம்களை கொன்றால்தான் இந்து ராஜ்ஜியம் அமைக்க முடியும் என்பது புதிய கருத்தாக உள்ளது.
இதுபோல், சர்ச்சைக்குரிய தவறானக் கருத்துக்களை கூறுவது துறவியின் வழக்கம்தான். இவர் இப்படி பேசுவதன் பின்னணியில் உபி அரசுஇருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ஆச்சரியமில்லை.
இந்த கருத்து மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் மீதான களங்கம் ஆகும். இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கும் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், துறவி முனியின் கருத்திற்கு உ.பி.,யின் வேறுசில துறவிகள் ஆதரவளித்துள்ளனர். துறவி முனியை போலவே இந்து ராஜ்ஜியத்தின் மீது சர்ச்சை கருத்தை கூறும் அயோத்யாவின் துறவி பரமஹன்ஸ் தாஸும் ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதன் மீது அயோத்தி மடத்தின் துறவியான பரமஹன்ஸ் கூறுகையில், “துறவி பஜ்ரங் முனியிடம் நான் போனில் பேசினேன். அவர் ஜிகாதிகளை மட்டுமே அகற்ற வேண்டும் எனக் கூறிய கருத்தை நான் ஆமோதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலமான மத்தியப்பிரதேசத்தின் சத்ரபூரின் துறவியான திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, ‘அடுத்த வருடத்திற்கு அனைவரும் தயாராகுங்கள். இந்தியாவை இந்து ராஜ்ஜியமாகக் காணத் தயாராகுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.
கடந்த 2021 முதல் வட மாநிலத் துறவிகளில் பலரும் இந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் எனவும், இதற்காக முஸ்லிம்களை கொல்லவும் வலியுறுத்தி கைதாகி வருவது நினைவுகூரத்தக்கது.