ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அ.தி.மு.க சார்பில் ஒரே வேட்பாளர் போட்டியிடுகிறார். இதில் அ.தி.மு.க வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னரே, ஓ.பி.எஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதோடு இரட்டை சிலை சின்னத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தது. இருந்தும் களத்தில் இன்னும் நேரடியாக அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஓ.பி.எஸ் பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பி.எஸ் இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதில் பேசிய ஓ.பி.எஸ், “எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து விலக்கியபோது, அ.தி.மு.க-வினுடைய தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் கழகத்தினுடைய அடிப்படை உறுப்பினர்கள் மூலமாகத் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சட்டவிதியை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். அப்படித்தான் அம்மா இறந்ததற்குப் பின்னால் கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
இன்றைக்கு அந்த சட்ட விதியை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்குச் சிதைத்துவிட்டார்கள். 23-ம் தேதி நடந்த கழகப் பொதுக்குழுவில் நாங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து 23 தீர்மானங்களை வடிவமைத்து அதை நிறைவேற்றுகின்ற பொதுக்குழுவாக அந்த பொதுக்குழு அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டு பொதுக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அந்த கூட்டத்துக்கு தற்காலிகமாக தலைமை தாங்குகின்ற தமிழ் மகன் உசேனை நான் முன்மொழிய, இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிந்தார்.
அந்த கூட்டம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு என்ன நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 23 தீர்மானங்களையும் ரத்து செய்யப்படும் என்று யாருடைய ஒப்புதலும் இல்லாமல், தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு தெரியாமல் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்… அதை யார் என்று உங்களுக்குத் தெரியும் நான் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார்.
இன்றைக்கு இரண்டாவது தர்மயுத்தம், எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழக சட்ட விதி, அம்மா கடைப்பிடித்த சட்ட விதியை காப்பாற்றியே தீர வேண்டும் என்று தொடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது. எந்த காலகட்டத்திலும் எம்.ஜி.ஆர், அம்மாவின் ஆன்மா இந்த இயக்கத்தைக் காப்பாற்றும்” என்றார். ஓ.பி.எஸ் பேசி முடித்த பிறகு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.