நிலக்கரி சுரங்க ஊழல் புகார் | சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

ராய்ப்பூர்: நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், ”சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், சத்தீஸ்கர் மாநில கட்டுமான வாரிய தலைவர் சுசில் சன்னி அகர்வால், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தேவேந்திர யாதவ், ஐஏஎஸ் அதிகாரிகள் சவுமியா சவுராசியா, சூர்யகாந்த் திவாரி, சமீர் விஷ்னோய், தொழிலதிபர் சுனில் அகர்வால் என மொத்தம் 9 பேருக்குச் சொந்தமான 12க்கும் அதிகமான இடங்களில் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நிலக்கரி சுரங்க முறைகேடு மூலம் பலனடைந்தவர்கள் என கருதப்படுபவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சத்தீஸ்கரில் இருந்து வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் நிலக்கரியில் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.25 வீதம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைக்கு முதல்வர் பூபேந்திர பெகல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு வெற்றி அடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் பாடுபட்டு வருகிறார்கள். அவர்களின் மன உறுதியை குலைக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்ற சோதனை மூலம் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியினரை சோர்வடையச் செய்துவிட முடியாது.

ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரை மற்றும் அதானி விவகாரம் ஆகியவற்றால் பாஜக அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உண்மை என்ன என்பதை நாடு அறியும். எங்கள் போராட்டம் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.