பட்டுக்கோட்டை, காந்தி பூங்கா அருகேயுள்ள கழிவு நீர் வாய்க்காலை இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இறந்தநிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று கழிவு நீர் வாய்க்காலில் மிதந்ததைக் கண்டு, தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த பட்டுக்கோட்டை நகர போலீஸார், குழந்தை சடலத்தை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையை வீசிச் சென்றது யார் என போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். “குறைபிரசவத்தில் பிறந்த ஆறு மாத ஆண் சிசுவின் சடலம் சாக்கடையில் கிடந்தது. அந்தக் குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் சாக்கடையில் வீசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குழந்தை கிடந்த பகுதியில் தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன. அதில் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்ட யாரோ, இந்தக் குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறோம்.
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா அல்லது திருமணம் மீறிய உறவில் பிறந்ததால், வெளியே தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் வீசினார்களா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். குழந்தை இறந்தே பிறந்ததா அல்லது கொலைசெய்து வீசினார்களா எனவும் விசாரித்து வருகிறோம். குழந்தை கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகள், அந்தப் பகுதியிலுள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.