ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன அடைக்கான் (28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுமதி (25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுமதி, பிரசவ வலி ஏற்படவே கடந்த வாரம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 17-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து நேற்று மாலை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சுமதி, குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சின்ன அடைக்கான், தன்னுடைய மனைவி சுமதி, பிறந்த குழந்தை, உறவினரான சிங்கிவலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேதுராஜாவின் மனைவி காளியம்மாள், ஆகியோருடன் ராமநாதபுரம், வித்தானூரைச் சேர்ந்த மலைராஜ் (50) என்பவர் ஆட்டோவில் ராமநாதபுரத்திலிருந்து வேதாளைக்குச் சென்று கொண்டிருந்தார்.

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரத்தை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோமீது நேருக்கு நேர் மோதிவிட்டு, சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்தது.
இந்த விபத்தில் சின்ன அடைக்கான், அவருடைய மனைவி சுமதி, பிறந்த ஆண் குழந்தை, ஆட்டோ டிரைவர் மலைராஜ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய காளியம்மாளை அந்த வழியாக வந்த வாகனஓட்டிகள் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் உச்சிப்புளி போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் விக்னேஷைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இறந்து கிடந்தவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த விபத்தில் இறந்த சின்ன அடைக்கானின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், நத்தமாகும்.
விபத்தில் காதல் தம்பதி, பச்சிளம் குழந்தையுடன் பலியான சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.