வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் ஓரு வாரமே உள்ளதால் ஆளும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதேபோல் அதிமுக தரப்பில் களமிறக்கப்பட்டுள்ள தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் பிரஷர் குக்கர் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு செங்கோடம்பாளையம் சக்தி நகர் டென்னிஸ் கோர்ட் எதிரில் உள்ள வீதியில் குமாரசாமி வீட்டில் இருந்து தி மு க வினர் குக்கர் வினியோகம். @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/f6A2FDVOde
— Savukku Shankar (@Veera284) February 20, 2023
செங்கோடம்பாளையம் சக்தி நகர் டென்னிஸ் கோர்ட் எதிரில் உள்ள வீதியில் குமாரசாமி என்பவரது வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு பிரஷர் குக்கர் விநியோகம் செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
இதேபோல் அதிமுகவினரும் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக காணொளி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். பிரஷர் குக்கர், கொலுசு விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது தேர்தல் பறக்கும்படை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிகள் தேர்தல் பறக்கும் படையினரோடு, போலீசாரும், துணை ராணுவத்தினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.