மகளிர் ரி20 உலகக் கிண்ண தொடரில் ,நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 102 ஓட்டங்களால் தோல்வியடைந்த இலங்கை அணி,தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ரி 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு ஏ இல் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பதிவு செய்த நிலையில் அரையிறுதி வாய்ப்பிற்காக வெற்றியினை எதிர்பார்த்து நியூசிலாந்து அணியை நேற்று (19) பார்ல் மைதானத்தில் எதிர் கொண்டது.
இதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்கள் பெற்றது.
நியூசிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அமெலியா கெர் 48 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களையும், சூஸி பேட்ஸ் 49 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களையும் அதிகமாக எடுத்திருந்தனர்.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் இனோக்க ரணவீர மற்றும் அச்சினி குலசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றிருந்தனர்.
இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 15.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் தோல்வியால் இலங்கை மகளிர் அணி ரி20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.