விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2ம் நாள் திருவிழாவான மயானக் கொள்ளை நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். காலை 9.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மயானம் நோக்கி புறப்பட்டார். பின்னர் பூசாரிகள் பிரம்மகபாலத்தை (கப்பறைமுகம்) எடுத்துக்கொண்டு ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். அங்கு மயானக்காளி முன்பு பக்தர்கள் தங்களது வயல்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சுண்டல், கொழுக்கட்டை போன்றவைகளை நேர்த்திக் கடனாக செலுத்தி இருந்தனர். உற்சவ அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததும், பக்தர்கள் செலுத்தி இருந்த பொருட்களை பூசாரிகள் வாரி இறைத்தனர்.
இதை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், தீராத நோய் குணமாகும் என்பதும் ஐதீகம். எனவே அங்கு கூடியிருந்த பக்தர்கள் போட்டி போட்டு அந்த பொருட்களை பிடித்து சாப்பிட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தவுடன் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் அம்மனை வேண்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். மேலும் சிலர் கோழியை கடித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
அதே போன்று திருமணம் நடக்கக் கோரியும், ஏற்கனவே வேண்டுதலின்படி திருமணம் நடைபெற்றதற்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள், கூரைப்புடவை அணிந்து வந்திருந்தனர். அதேபோன்று குழந்தைகள் பலரும் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்தனர். விழாவின் 3ம் நாளான இன்று காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை காலை தங்க நிற பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (22ம் தேதி) தீ மிதி உற்சவமும், இரவில் அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து 24ம் தேதி மதியம் 1 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.