மைசூர் சாமுண்டி மலைக்கு படிக்கட்டு நடைப் பயணம்! – சுவாரஸ்ய அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மைசூருவின் காவல் தெய்வம், உடையார் மன்னர்களின் குல தெய்வம் சாமுண்டேஸ்வரி தேவி. 3000 அடி மலை மேல் இந்த அம்மன் குடிகொண்டு இருக்கும் கோயில் 18 சக்தி பீடங்களில் ஒன்று. மைசூரு செல்லும் அன்பர்கள் தவற விடக் கூடாத சுற்றுலா தலம். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் 17ம் நூற்றண்டில் விஜயநகர மன்னர்களால் திருத்தி அமைக்கப்பட்டது. மலைக்கு செல்ல நல்ல தார்-பாதையும், படிக்கட்டுகள் மூலமாகவும் செல்லலாம். இன்றுள்ள கல் படிக்கட்டுகள் உடையார் மன்னர்கள் காலத்தில் அமைக்க பெற்றன. காலை நேரத்தில் படிக்கட்டுகள் மூலமாக மலை கோவிலுக்கு சென்ற இனிய தென்றல் அனுபவம் இது.

எங்கள் வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு சாமுண்டி மலையின் அடிவாரத்தை காலை 7 மணிக்கு அடைந்தேன். கோயிலுக்கு செல்ல சுமார் 1000 படிகள் உள்ளன. அடிவாரத்திலுள்ள சாமுண்டி தேவியின் சிறு கற்சிலையை  வணங்கி என் பயணத்தை தொடர்கிறேன். 10 படிகள் கடந்தால் கோபுர  நுழைவு வாயில் (படம் 1) அருகே உள்ள சிறு விநாகயர் சன்னதியில் அருள் பெற்றுக்கொண்டு மேலே செல்கிறேன். 50வது படிகட்டு சமீபம் வல, இடப் புறமாக சிறு மண்டபங்கள் உள்ளன.

படம் 2 : மண்டப சுவர்கள்

விசேஷ  தினங்களில் தனிப்பட்ட குடும்பங்கள் ஆடு, கோழி பலி படையலிட்டு விருந்துண்ணும் இடமாக அவை பயன்படுகின்றன.  மண்டப சுவர்கள், வால் இல்லா மாந்தர்களால் வரையப்பட்ட சித்திரங்களால், பாழ்ப் பட்டு கிடக்கிறது (படம் 2). 

செதுக்கப்பட்ட படிக்கட்டு  எண் 100 தெரிகிறது. ஒவ்வொரு நூறு படிக்கும் படி எண் செதுக்கப்பட்டுள்ளன. 700 படிகள் வரை மிகவும் சரிவான பாதை. படிகளின் உயரம்  சில 2-3 இன்ச் முதல் 1.5 அடி வரையில் காணப்படுகிறது. படிகள் யாவும் சரிசமமாக செதுக்கப் பட்டவை அல்ல. 200வது படியிலிருந்து கீழ் நோக்கினால் குதிரை பந்தய  மைதானத்தைப் பார்க்கலாம் (படம் 3).

படம் 3 ; குதிரை பந்தய மைதானம்

400வது படியை  அடைந்தால், வலப்புறம் காலபைரேஸ்வரர் சன்னதி வரும் (இடப்புறம் இளைப்பாற இடம் உண்டு). அங்கு வழிப்பட்டு,  என் பயணத்தை தொடர்கிறேன். 450வது படியை நெருங்கினால், 5 படிகள் ஒரே கல்லில் செதுக்கப் பட்டிருப்பதை காணலாம்.

படம் 4 :பாண்டவர் படிகள்

ஒன்றில்  ‘பாண்டவ மெட்டலு” ( பாண்டவர் படிகள்) என்று கன்னடத்தில் எழுதியிருக்கிறது (படம் 4  ). 600வது படிக்கட்டு வரும் சமயம், வண்டிகள் செல்லும் தார் சாலையை கடக்க வேண்டி வரும்.

படம் 5 : நந்தி சிலை

700வது படிக்கட்டின் அருகில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லால் ஆன  இந்தியாவின் 3வது பெரிய கருங்கல் நந்தி சிலை உள்ளது (படம் 5 ). இதன் சமீபம், கரும்பு ஜூஸ் விற்பனை உண்டு. காலை நேரத்தில், ஜூஸ் ஜில்லென்று குடிக்க சுவையாக இருக்கிறது. இங்கேயே ஒரு குகை கோயிலில் சிவன் அருள் பாலிக்கிறார். 

இதற்குப் பின்னர், படிக்கட்டுகள் குறைந்த சரிவில் செல்கின்றன. சிரமமில்லை. லெமன் போட்ட கரும்பு ஜூஸை பருகியப் பின்னர் பயணத்தை தொடர்ந்தேன்.

படம் 6 : செல்போனில் வான்வழி காட்சி

900வது படிக்கட்டு அருகில் மைசூரு நகரத்தின்  மேற்கு பகுதியின் பார்வை நோக்கும் இடத்தில் நின்றேன். செல்போனில் வான்வழி காட்சிகளை (படம் 6 ) பதிந்து கொண்டு இன்னும் சில படிகள் ஏறினால், வலப்புறம் சிறு அனுமார் கோயில் தென்படுகிறது. பின்னர், 1000வது எண்  பதித்த படிக்கல் பார்க்கிறேன் (படம் 7 ). மணி காலை 7.32. அடுத்து இங்கிருந்து கான்க்ரீட் பாதை வழியே 40 படிகள் கடந்து கோயில் அமைவிட பகுதியை அடைகிறேன் (படம் 8).

படம் 7 : 1000வது எண் பதித்த படிக்கல்

இங்கே பலதரப்பட்ட கடைகளுடன், பூஜை சாமான்கள் விற்கும் கடைகள் உள்ளன. கோயில் உள்ளே நுழைய இலவச, கட்டண (ரூ 30), சிறப்பு கட்டண (ரூ  100) வழிகள் உள்ளன. அன்று கூட்டம் இல்லாததால் விரைந்து அம்மனை தரிசிக்க முடிந்தது (படம் 9, 10).

படம் 8

கோயில் உள்ளே சுற்று பாதையில் லட்டு பிரசாதம் (இலவசம் அல்ல) வாங்கிக்  கொண்டு மலை உச்சியில் உள்ள வேறு கோயில்களை பார்க்கக் கிளம்பினேன்.

படம் 9

முதலில், மஹாபலிஸ்வரர் கோயில் (படம் 11 ).

படம் 10

இது, சாமுண்டி கோயிலை விட தொன்மை வாய்ந்தது. பின்னர், நாராயண சுவாமி கோயிலைப் (படம் 12 ) பார்க்கலாம். குறும்புத்தனங்கள் நிறைந்த குரங்குகள் பட்டாளம் கவனிக்க வேண்டிய ஒன்று. நாம் ஏமாறும் தருணத்தை அவை நோட்டமிட்டு கொண்டிருக்கும் (படம் 13 ). இங்கே, கோயில் பொறுப்பில் அன்னதான சேவையில் காலை சிற்றுண்டி மற்றும் மதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது.

படம் 11

நான் சென்ற அன்று சுவையாக உப்புமா, கேசரி பாத் கிடைத்தது. சிற்றுண்டி கொடுத்த ஆற்றலால் களைப்பெல்லாம் மறைந்து (மலை மேல் உள்ள) பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மகிஷாசுரன் சுமார் 10 அடியில் வண்ணக்கோலத்தில் கம்பிரமாக நிற்கும் சிலை இருக்கும் இடம் வந்தேன். வலது கையில் கத்தி, இடது கையில் நாகம் (படம் 14 ). பக்கத்தில் கோயில் சார்பாக தங்குமிட வசதியும்  உண்டு.

படம் 12

இன்னொரு சுவாரசிய தகவல். சாமுண்டேஸ்வரியின் தங்கை ஜ்வாலாமுகி திரிபுர சுந்தரி சாமுண்டி மலையிலிருந்து 3 கி மி தொலைவில் கோயில் கொண்டிருக்கிருக்கிறாள். விருப்பமிருந்தால் சென்று வரலாம்.

படம் 14

பல இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதியவர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் வேண்டி படிகளில் ஏறி கோவிலுக்கு வருகிறார்கள். கல்லூரி காதல் ஜோடிகளும் உண்டு. மற்றவர்கள் ஆரோக்கியமாக இருக்க அல்லது ஜாலியாக சவாரி செய்து மலை உச்சிக்கு செல்கின்றனர். ஒருவரின் ஆற்றல் மற்றும் வயதைப் பொறுத்து 1000 வது படியை அடைய சுமார் 20 முதல் 60 நிமிடங்கள் ஆகும்.

படம் 13

13 நிமிடத்தில் 1000 படி கடந்து சாதனை படைத்தவர்கள் உண்டு. கோயிலின் உச்சிக்குச் செல்லும் மக்கள் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் அம்மனுக்குப் பிரார்த்தனையாக படிகளில் குங்குமம், மஞ்சள் இடுவது, பூக்கள் வைப்பது அல்லது கற்பூரம் ஏற்றுவது (படம்  15) செய்கிறார்கள். 

மலை இறங்கும் படலத்தை ஆரம்பிக்கிறேன். இதில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. படிகளின் உயரம் சமனற்று இருப்பதால் கண் மூடிக் கொண்டு இறங்குவது ஆபத்தில் முடியும். மலையடிவாரம் – கோயில் தரிசனம்- மலை வளாகம் சுற்றல்- மலையடி வாரம் என்று மொத்தம் 2 மணி நேரம் ஆயிற்று. இடைநிற்றல் இல்லாமல் நான் பயணிக்கும் போது  ஒன்றரை மணியில் சுற்று முடிந்திருக்கிறது.

படம் 15

கடந்த ஆறு வருடமாக வாரந்தோறும் மலை ஏறும் அட்டவணையை பின்பற்றுகிறேன். தொடர்ந்து மலை ஏறுவது மருத்துவமனை அல்லது உடற்பயிற்சிக்  கூடத்திற்கு செல்லாமல் இருக்க உதவுகிறது. படி ஏறுதல் என்பது ஒரு இயற்கையான டிரெட் மில். நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு இருக்கும் ஜிம்-லிருந்து வெளியே வந்து இயற்கையாக அமைந்த மலையேற்ற ஜிம் அற்புதமல்லவா?

சரி, அம்மனிடம் என்ன வேண்டிக்கொள்வீர்கள் என்று கேட்கிறீர்களா?. நான் வரும் வாரத்திலும் அம்மன்  தரிசனம் கிடைக்க அருள் புரிய வேண்டுவேன்.

அதாவது , அது வரையில் நான் உடல்நலத்துடன் இருக்க வேண்டும். என் மனைவி, மக்கள் நலம் என்றால் தான் நானும் நலமுடன் படியேற முடியும். என் குடும்பம் நலம் என்றால் , எங்கள் பால்காரர், காய்கறியாளர், மளிகை கடைக்காரர் (ஏன் , விகடன் குழுமமும் சேர்த்து) போன்றோர் பொருளாதாரம் கூட மேம்படும் அல்லவா ?. இயற்கையில் நாம் எல்லோரும் ஒருவர்க்கொருவர் சார்ந்து இருக்குறோம்.

யாவரும் நலமென்று இருக்க வேண்டுவதன்றி வேறொன்றும் அறியேன் தாயே !.

குறிப்பு: இங்கே உள்ள பல தகவல்கள் இன்டர்நெட் பொது வெளியில் கிடைப்பவை. நன்றி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.