ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணத்தில் அமைந்துள்ள சத்தீஸ்வரி கன்னிமார்கள் எனப்படும் சப்த கன்னிகள் ஆலயம் மற்றும் குதிரைமலையான் கருப்பணசுவாமி திருக்கோயிலில் மாசி சிவராத்திரி பாரிவேட்டை விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்பாள் மற்றும் கருப்பணசுவாமிக்குப் பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டுப் பொங்கல் வைத்துத் தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருப்பணசுவாமி பாரிவேட்டை விழா நடைபெற்றது. கோயில் பூசாரி ராஜன் மேற்பார்வையில் பாரிவேட்டை நடத்தப்பட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, பெரியபட்டிணத்தில் அமைந்துள்ள அழகுநாயகி அம்மன் திருக்கோயிலில் மாசி சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.